Breaking

Sunday, March 24, 2019

ஆன்மீக துறையில் இருந்து விலகி செல்கின்ற போதுதான் அனாவசியமான பிரச்சனைகளை இளைஞர்கள் எதிர்நோக்குகின்றனர் - அரசாங்க அதிபர் மா.உதயகுமார்



(க. விஜயரெத்தினம்)

ஆன்மீக குருவும்,இலங்கை இராமகிருஷ்ணமிஷன் முன்னாள் தலைவருமான   ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்த ஜீ மகாராஜ் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருக்கின்றார்.  மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்ல சிறார்களும்,அவ்வில்லத்தை  சார்ந்தவர்களும் மாலை அணிவித்து சனிக்கிழமை(23)மாலை 4.00 மணியளவில் வரவேற்றனர்.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக மாவட்ட அரச அதிபர் மா.உதயகுமார்,ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்த ஜீ மகராஜ் , ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ்,மற்றும் ஹரி சிறுவர் இல்ல நிறுவுனர் எஸ்.சந்திரகுமார்,கல்லடி சித்தி விநாயகர் பேச்சியம்மன் ஆலயங்களின் முகாமையாளர் என்.ஹரிதாஸ், கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ்,பெற்றோர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த  மாவட்ட  அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்:-

இன்று இந்த ஹரி  சிறுவர் இல்லத்திற்கு ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்தாஜீ அவர்கள் வருகை தந்த இந்நாளை  ஒரு பொன்னாளாகவே நான் கருதுகிறேன்.எங்களுடைய இந்துமதம் மற்றும் மக்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை  மேற்கொள்ள இத்துறவிகள்  ஆற்றும்  சேவையானது   மிகவும் அளப்பரியது.போற்றத்தக்கதாகும்.

அந்தஅடிப்படையில்  எங்கள்  பிரதேச  மக்களை கவர்ந்த  ஒரு ஆன்மீகவாதியாக  காணப்படுகின்றார்.இங்கேயும் சரி,கொழும்பிலும் சரி அப்பிரதேசத்தில் காணப்படுகின்ற மக்களுக்கு தேவையான பணிகளை அவர்களுக்கு உரிய முறைப்படி செய்து அவர்களை ஆன்மீக துறையிலே முன்னேற்றி அவர்களுடைய ஆன்மீக ஈடேற்றத்திற்காக பல்வேறு அறப்பணிகளை அவர் செய்திருக்கின்றார்.அவர் சொல்லித்தந்த பாதையை நாம் சரியாக பின்பற்றி செல்ல வேண்டும்.

ஆன்மீக  சிந்தனையை எம்மீது உருவாக்க கூடிய ஒரு நிகழ்வாக இந்த இந்நிகழ்வு   இன்று காணப்படுகின்றது. குறிப்பாக எமது இளைஞர்கள் ஆன்மீக துறையில் இருந்து விலகி செல்கின்ற போதுதான் அனாவசியமான பிரச்சனைகளை அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.அண்மைக் காலங்களாக இளைஞர்கள் மத்தியில்  இருக்கின்ற இந்த போதை வஸ்து போன்ற தூர்நடத்தைகள் தொடர்பான விடயங்கள் எங்களுடைய இளைஞர்களை பாதிப்பதற்கு எங்களுடைய இந்த ஆன்மீக துறைகளில் இருந்து விலகி செல்கின்ற ஒரு நிலையே காரணமாக இருக்கிறது என்பதை நான் உணர்கின்றேன்.

ஆகவே இளைஞர்கள் இவ்வாறான ஆன்மீக சிந்தனை,உணர்வு,செயல்திறன் என்பனவற்றுடன் ஊக்கப்படுத்தி அதற்குள் இளைஞர்களை உட்புகுத்தி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்தா ஜீ மாலை அணிவித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பெற்றார்.இதன்போது சுவாமி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவும்,கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

















No comments:

Post a Comment