Breaking

Friday, March 22, 2019

மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்



மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களின் ஒரு பகுதியினரால், இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யும் நடவடிக்கையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பக்கச்சார்பாக நடந்துள்ளதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளம் வீரர்களை புறந்தள்ளி ஓய்வு நிலையில் உள்ளவர்களைக்கொண்டு கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தினை பதிவு செய்துள்ளதாகவும் தற்போது கழகத்திற்காக விளையாடிவரும் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன்போது பிரதேச செயலாளருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அவருக்கு எதிரான பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

எனினும் கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் யாப்பின் அடிப்படையிலேயே இந்த பதிவு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரின் தவறான நடவடிக்கையே இவ்வாறு இரண்டு குழுக்களாக பிரிந்ததற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் பதிவுசெய்யப்பட்டுள்ளதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கருதுபவர்கள் அது தொடர்பாக நீதிமன்றுக்கு சென்று தெளிவடையமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.







No comments:

Post a Comment