கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் தேவாலயங்கள் மீதும் ஹோட்டல்களின் மீதும் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல்களை பெண்கள் செயற்பாட்டுவலையமைப்பு வன்மையாகக்கண்டிக்கின்றது. மகிழ்வுடன் ஈஸ்டர்தினத்தன்று தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தகுழந்தைகள் உட்பட 369 அப்பாவிப் பொதுமக்கள் குரூரமாகக் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். சிதறிய மனித உடலங்கள் பைகளில் கொண்டுசெல்லப்படுகின்றன.
குழந்தைகள்> பெற்றோர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் இறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது குரூரமானதும் வார்த்தைகளால் விபரிக்கமுடியாததுமான ஈனச் செயலாகும். எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடனும் கத்தோலிக்க சமுதாயத்துடனும் உள்ளது என்பதை நாம் தெரிவிக்கவிரும்புகின்றோம்.
இலங்கையின் அனைத்துச்சமுதாயங்களும் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் ஏற்படுத்திய அதிர்ச்சியினால் உறைந்துபோயுள்ளன. புனித நாளில் கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் அரசாங்கம் சிறுபான்மைமதமக்களை இவ்வாறான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்குமா என்றகேள்வியை எழுப்பியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் சகல மக்கள் மத்தியிலும் யுத்தம் பற்றிய உணர்வினையும் பாதுகாப்பற்ற உணர்வினையும் தோற்றுவித்துள்ளது.
அண்மையில் முஸ்லிம்கள் தமக்கு எதிராக இலக்குவைக்கப்பட்டு நடத்தப்பட்ட இன வன்முறைகளுக்கு முகங்கொடுத்தனர். வெறுப்பைத் தூண்டும் சக்திகள் பதில் தாக்குதல் பற்றிய அச்சத்தை முஸ்லிம் மத்தியில் ஏற்படுத்தலாம். இஸ்லாம் அப்பாவிமக்களைக் கொல்வதை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவ்வாறான செயல்களை நிராகரிக்கின்றது என்பதை ஏனைய மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என இஸ்லாமிய மக்கள் ஏங்குகின்றனர். தமிழ் மக்கள் மத்;தியிலும் இத்தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்தாக்குதல் பாகுபாடுமிக்க சட்டங்கள் மற்றும் நியதிச் சட்டங்களை நீக்குதல் உளளடங்கலாக வழங்கப்பட்ட நிலைமாறுகாலநீதி பற்றியவாக்குறுதிகளை மறுதலிக்கப் பயன்படுத்தப்படலாம் எனத் தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். வெளிநபர்கள் எமது அழகிய நாட்டை மீண்டும் இரத்தம் சிந்துதல்> பாகுபாடு மற்றும் பயம் என்பவற்றுடன் இணைத்துள்ளனர்.
இந்தத்தாக்குதலின் சூத்திரதாரிகளின் இழிசெயலை நாம் மிகவும் வன்மையாகக்கண்டிக்கிறோம். வணக்கத்தலங்களில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான இரக்கமற்ற பொதுமக்கள் மீதான படுகொலைகள் நாம் பகிர்ந்துகொள்ளும் மனிதத்தன்மைக்கு எதிரானவை என்பதுடன் அவை எவராலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நியாயப்படுத்தமுடியாதவையாகும். இந்தக் குரூரக் குற்றத்திற்குத் துணைநின்ற அனைவரும் கைதுசெய்யப்பட்டு சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டும். இவ்வாறான குற்றங்கள் மீண்டும் நிகழாமை மற்றும் இவை இடம்பெற அனுமதித்த அரசின் குறைபாடுகள் என்பவற்றுக்கான பொறுப்பான்மைகள் எதிர்வு கூறப்பட்டுள்ளன.
சாத்தியமான தாக்குதல்கள் பற்றிய தகவல்களை அரச புலனாய்வுப்பிரிவுகள் பெற்றுக்கொண்டபோதும் அவைபற்றி நாட்டுமக்களுக்கு அறியத்தராமல் இருந்தது மிகவும் வருத்தமளிக்கின்றது. இந்தக்கவனயீனமே இவ்வாறான பாரிய இடர்கள் மற்றும் சேதங்கள் ஏற்படக் காரணமாயிருந்தது என நாம் நம்புகிறோம்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான நம்பகமான தகவல்களை உயர் அரசமட்டங்களில் மாத்திரம் வைத்திருக்காது சாதாரண குடி மக்களின் உயிர்களைக்காக்கும் வண்ணம் எவ்வாறு கையாள்வது மற்றும் வழங்குவது என்பதுபற்றி நாம் இந்தச்சம்பவங்களில் இருந்துகற்றுக்கொள்ளவேண்டும்.
இது எவ்வாறு நிகழ்ந்தது மற்றும் இங்கிருந்து நாம் எங்கு பயணிக்கப்போகிறோம் எனத்தீர்மானிக்கத்திணறும் இந்தச்சந்தர்ப்பத்தில் அனைத்துக்கும் மேலாக நாம் ஒற்றுமையின் மூலமே எமது பலத்தைக்கண்டறியவேண்டும். வேற்றுமைகள் மற்றும் வெறுப்பு என்பனவன் முறைகள் மற்றும் இழப்பையே விதைக்கும் என்பதை வரலாறு எமக்குக்கற்றுத்தந்துள்ளது. சம்பவங்கள் பற்றி விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறும் மேலதிகதாக்குதல்களில் இருந்து மதச்சிறுபான்மைக் குழுக்களை பாதுகாக்குமாறும் எதிரத் தாக்குதல்களைத்தடுக்குமாறும் சமூக ஒற்றுமையை ஏற்படுத்துமாறும் நாம் அரசைக் கேட்டுக்கொள்கிறோம். சமூகங்களுக்கு இடையேயான பிளவுகளை நீக்கும் முயற்சிகள் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பினைக் கொண்டதாக அமையவேண்டும். உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகளைப்பரப்புவதைத் தவிர்த்து ஒற்றுமை மூலம் பலமடையும் முயற்சிகளுக்கு நாம் எமது முழு ஆதரவையும் வழங்குகிறோம். அரசாங்கம் தீங்கிழைக்கும் வதந்திகளில் இருந்தும் சமூக ஊடகங்களில் இடம்பெறும் வெறுப்புப் பேச்சு என்பவற்றில் இருந்தும் தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கவேண்டும். அப்பாவிப்பொதுமக்களை மேலதிக தாக்குதல்களில் இருந்தும் எதிர்த் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாப்பதற்கான நடடிக்கைகள் மற்றும் அதற்கான செய்தி வழங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு ஊரடங்குச்சட்டங்கள் மற்றும் வீதிகளில் ஆயுதப்படையினரின் பிரசன்னம் என்பனமாத்திரம் போதுமானவை அல்ல.
இலங்கையின் அனைத்து சமூகங்களையும் இந்த முயற்சியில் இணைத்;து எமது சக குடிமக்களை சென்றடையுமாறு நாம் கோரிக்கைவிடுக்கின்றோம். இந்த வருடம் தேர்தல் வருடமாக இருப்பினும் இது அரசியலாக்கப்பட வேண்டியவிடயமல்ல. எமக்கு உரிய எதிர்காலத்தை அடைவதற்கு எமது ஒன்றுபட்ட ஆற்றுப்படுத்தல் மற்றும் தப்பிப் பிழைத்தல்> ஒற்றுமையைக் கட்டியெழுப்பல் மற்றும் நீதி என்பன அவசியமானவை. இந்தச்சம்பவங்கள் சிவில் சமூகம் உள்ளிட்ட எம் அனைவரையும் சமுகத்தின் உள்ளே மற்றும் சமூகங்களின் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றிணைந்து முன்னேறிச்செல்லல் என்பன எவ்வாறு மேற்கொள்ளப்படவேண்டும் என்பவற்றை மீள் சிந்தனைக்கு உட்படுத்தும் நிலைக்குத்தள்ளியுள்ளது.

No comments:
Post a Comment